
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கன்னொலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கூப்பர் கன்னொலி ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்த கையோடு வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மார்னஸ் லபுஷாக்னே 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.