
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 73 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டாம் லேதம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த வில் யங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டாம் லேதமும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களைக் கடந்தது. அப்போது சதமடித்து அசத்திய வில் யங் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 107 ரன்க்ளைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார்.