சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் மில்லர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் கடந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் சில சாதனைகளை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை போராடி 71 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 82 ரன்களைக் குவித்து அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வாகித்தார். மேற்கொண்டு இப்போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டேவிட் மில்லர் தனது பெயரில் தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அதன்படி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது சர்வதேச டி20 போட்டிகளில் 2500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் மில்லர் பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயோன் மோர்கன், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது 2425 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் குயின்டன் டி காக் சாதனையையும் முறியடித்துள்ளார். முன்னதாக குயின்டன் டி காக் 92 போட்டிகளில் 91 இன்னிங்ஸ்களில் 2584 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில், இப்போது டேவிட் மில்லர் 130 போட்டிகளில் 114 இன்னிங்ஸில் 2591 ரன்கள் எடுத்து குயின்டன் டி காக்கை பின்தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now