டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 161 ஒருநாள் போட்டிகள், 111 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 176 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சதம் அடித்துள்ள அவர் மிகச் சிறப்பான தொடக்க வீரராக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் 37 வயதாகும் டேவிட் வார்னர் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று அறிவித்திருந்தார்.
Trending
அந்தவகையில் சிட்னியில் தனது சொந்த மண்ணில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியோடு அவர் விடை பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி நாளை மறுதினம் ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் தொடங்க இருக்கும் போட்டியோடு அவர் விடைபெற இருக்கிறார். இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தான் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென டேவிட் வார்னர் அதிரடி முடிவு ஒன்றினை கையிலெடுத்து அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் டேவிட் வார்னர் தான் ஒருநாள் போட்டியிலும் இனி இடம்பெறப் போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அவர் இன்னும் சில ஆண்டுகள் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு முடிவை அறிவித்துள்ளார்.
அதோடு ஏற்கனவே இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற முடிந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்ற போது அவர் துவக்க வீரராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இனிவரும் ஆஸ்திரேலிய அணியில் அவரது இடத்தில் ஒரு இளம் வீரர் விளையாட வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவினை அவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் ஒரு சில ஆண்டுகள் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now