
கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் போட்டி நேர்ற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 46 ரன்களையும், முகமது ஹாரிஸ் 28 ரன்களையும், அல்ஸாரி ஜோசப் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால், பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அப்பாஸ் அஃப்ரிடி, குஷ்தில் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் கடந்து 60 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் குஷ்தில் ஷா 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.