Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்து உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Trending
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தர். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை நாதன் மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்கள் எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்னுடனும் என ஜஸ்பிர்த் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் லபுஷாக்னேவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். பின் 64 ரன்களில் லபுஷாக்னே ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது சசத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி உள்ளீட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்டும் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 140 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தடுமறிய நிலையில், அஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்ளை கைப்பற்றினர். இருப்பினும் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
பிறகு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேஎல் ராகுல் 7 ரன்னில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 11 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 28 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இந்திய அணி 105 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து ஜோடி சேர்ந்துள்ள ரிஷப் பந்த் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 29 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now