
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை ஒரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ராகுல் 37 ரன்களுக்கு, ஷுப்மன் கில் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்து உள்ளிட்ட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித்தும் 2 ரன்னுடனும் என ஜஸ்பிர்த் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் லபுஷாக்னேவுடன் இணைந்த டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் லபுஷாக்னே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். பின் 64 ரன்களில் லபுஷாக்னே ஆட்டமிழந்த நிலையில், மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது சசத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.