
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 57 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் ஆசாமும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார், பின்னர் இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத்தும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் ஷகீல் 42 ரன்களுடனும், சல்மான் ஆகா 10 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் சௌத் ஷகீல் அரைசதம் கடந்தார். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சல்மான் ஆகா 45 ரன்னில் விக்கெட்டை இழக்க, 66 ரன்களைச் சேர்த்த நிலையில் சௌத் ஷகீலும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளையும், சிமோன் ஹார்மன் 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.