
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய் மோரிஸ்வில்லே அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 5 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்லும் 34 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் கரிம் ஜானத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 ரன்களைச் சேர்க்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெக்கான் அணி தரப்பில் ரிச்சர்ட் கிளீசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.