
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பும்ரா வேகத்தில் ஆரம்பத்திலேயே இப்ராஹிம் ஸத்ரான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டாக 3ஆவது களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த ரஹ்மத் ஷா 16 ரன்களில் அவுட்டானார். அதனால் 63/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாஹிதி மற்றும் ஒமர்சாய் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய முயற்சித்தனர்.
அந்த வகையில் மிடில் ஓவர்களில் நங்கூரமாக நின்று 35 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஃப்கானிஸ்தானை மீட்டெடுத்த போது ஓமர்சாய் 2 பவுண்டரை 4 சிக்சருடன் 62 ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் ஷாஹிதி 43 ஓவர்கள் வரை சிறப்பாக விளையாடி 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 80 ரன்கள் எடுத்திருந்த போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினார்.