
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வெளிநாட்டு கீப்பர்களுக்கு கடினமான பரீட்சையை அளிக்கும் சூழ்நிலையில் ஃபோக்ஸ் தனது விக்கெட் கீப்பிங் திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.
இதுவரை அவர் இத்தொடரில் ஆறு கேட்சுகளையும், இரண்டு ஸ்டம்பிங்கையும் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரெஹான் அகமதுவின் பந்துவீச்சில் இரண்டு சிறந்த கேட்சுகளை பிடித்ததன் மூலம் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அலெக் ஸ்டீவர்ட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை விட பென் ஃபோக்ஸ் தற்போது விக்கெட் கீப்பிங்கில் வேகமாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்.