
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றியும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்னிலும், வில் ஜேக்ஸ் 11 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னிலும், திலக் வர்மா 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் தீபக் சஹார் 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்துள்ளது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.