
இங்கிலாந்துக்காக எதிராக இந்திய அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.
மேலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் நடைபெற உள்ள இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டைப் போல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
முன்னதாக இந்த தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதும் 4 பயிற்சி போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் வகையில் நடைபெறும் அந்த போட்டிகளில் சில முக்கிய இங்கிலாந்து வீரர்கள் விளையாட உள்ளனர்.