
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியானது வெளிநாடுகளில் நடைபெற்று வரும் போட்டிகளில் தடுமாறி வருகிறது.
மேலும் குறிப்பிட்ட சில வீரர்கள் வெளிநாடுகளில் பெருமளவு தடுமாறி வருவதையும் நம்மால் தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடைபெறும் ஆட்டத்தில் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் கூட முதல் இன்னிங்சில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். அவரை தவிர்த்து கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் ஷுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.