Advertisement

தனது தடையை எதிர்த்து முறையீடு செய்த மனுவை திரும்ப பெற்றார் டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்த டேவிட் வார்னர், தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
'Disappointed with this outcome', Cricket Australia respond to Warner's decision on leadership ban
'Disappointed with this outcome', Cricket Australia respond to Warner's decision on leadership ban (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 07, 2022 • 06:52 PM

கடந்த 2018ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்திபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த உப்புத்தாளைக் கொண்டு பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் பந்தைச் சேதப்படுத்த முயன்றது தொடர்பான குற்றச்சாட்டை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 07, 2022 • 06:52 PM

அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. இரு ஆண்டுகள் கேப்டன் பதவியை வகிக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. வார்னர் கேப்டனாவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 

Trending

நன்னடத்தை விதிகளில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து கேப்டன் பதவியை வகிக்க தனது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்தார் டேவிட் வார்னர். தண்டனையை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் அவர் இறங்கினார். இதனால் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு வார்னருக்கு இருப்பதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில் தனது மனுவை விசாரிக்கும் குழுவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வார்னர். குழுவின் தவறான முடிவுகளால் தனது மனுவைத் திரும்பப் பெறுவதாகவும் வார்னர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “கிரிக்கெட்டை விடவும் என் குடும்பமே எனக்கு மிகவும் முக்கியம். எனக்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு கிரிக்கெட் மீதான என்னுடைய அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளேன். சீரமைத்துக் கொண்டுள்ளேன். எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் நானும் என் குடும்பமும் கடந்த ஐந்து வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். 

கேப் டவுன் டெஸ்டுக்குப் பிறகு என்னால் அவர்கள் தாக்குதல்களுக்கும் அவமானங்களுக்கும் ஆளானாலும் குடும்பத்தின் முழு ஆதரவும் எனக்கு இருந்தது. நன்னடத்தை விதிகளில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மாற்றம் செய்ததைத் தொடர்ந்து எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி கடந்த நவம்பர் 25 அன்று மனுவை அளித்தேன். 

ஆனால், சம்பவம் நடைபெற்ற டெஸ்ட் குறித்தும் என்னைப் பற்றியும் மக்களிடம் கருத்து கேட்க விசாரணைக் குழு முடிவெடுத்துள்ளது. கிரிக்கெட்டின் அழுக்கைக் களைய என்னுடைய குடும்பம் வாஷிங் மெஷினாக இருக்க விரும்பவில்லை. 2018இல் நடைபெற்ற சம்பவங்களை குறித்து மீண்டும் விசாரித்து என்னையும் என் குடும்பத்தையும் மேலும் ஊடகங்கள் மத்தியில் அவமானப்படுத்த குழு விரும்புகிறது. 

என்னிடம் தற்போது மாற்று யோசனை இல்லை. எனினும் என்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பமும் என்னுடைய அணி வீரர்களும் மீண்டும் மனவேதனையை அடைய நான் விரும்பவில்லை. கிரிக்கெட்டை விடவும் சில விஷயங்கள் முக்கியமானவை” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதையடுத்து, நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக இவரும் கடந்த 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் தண்டனைப் பெற்று, தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement