
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர் மூலம் அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங்கின் அபார ஆட்டம் காரணமாக 212 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்து சமன் செய்தது.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் களமிறங்கிய இந்திய அணியும் 16 ரன்களை சேர்த்தது. இதனால் ஆட்டம் 2ஆவது சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது. அதில் இந்திய அணி 11 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
அதில் ரவி பிஷ்னாயை வைத்து ரோஹித் சர்மா துணிந்து ரிஸ்க் எடுத்தார். அப்போது ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி மற்றும் குர்பாஸ் இருவரும் சிக்சர் அடிக்க முயற்சித்து 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.