
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதாம் சிங் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து 7 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 10 ரன்களுக்கும், ஷஷ்வாத் ராவத் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த ரியான் பராக் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குமார் குஷாக்ரா 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்தியா ஏ அணியானது 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஷம்ஸ் முலானி - தனூஷ் கோட்டியான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் சேர்த்த நிலையில் தனூஷ் கோட்டியான் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரஷித் கிருஷ்ணா 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.