
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை தொடர். அந்தவகையில் நடப்பாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கொண்டு இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வய்ப்பு கிடைக்கும் என்பதால், இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளன.
அந்தவகையில் நேற்று தொடங்கிய இந்தியா ஏ மற்றும் இந்திய பி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக்க அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணியானது தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினாலும், மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமடித்து அசத்தியதுடன், அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக இந்தியா பி அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை முஷீர் கான் 108 ரன்களுடனும், நவ்தீப் சைனீ 29 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் அரைசதம் கடந்து அசத்திய நவ்தீப் சைனி 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த யாஷ் தயாள், முகேஷ் குமார் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.