
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் 90 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணியால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 237 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.