ENG vs IND, 2nd Test: பர்மிங்ஹாமில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளது.

Birmingham Test: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பர்மிங்ஹாமில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 269 ரன்களையும், ரவீந்திர ஜடேஜ் 89 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயப் பசீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஸ்மித் 21 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 184 ரன்களையும், ஹாரி புரூக் 17 பவுண்டரிகளுடன் 158 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
இதில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் மீண்டும் சதமடித்து அசத்தியதுடன் 161 ரன்களையும், ரிஷப் பந்த் 65 ரன்களையும், கேஎல் ராகுல் 55 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 69 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் எனும் இமாலய இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், பென் டக்கெட் 25 ரன்னிலும், ஜோ ரூட் 6 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ஒல்லி போப் 24 ரன்களுக்கும், முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஹாரி புரூக் 23 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் பென் ஸ்டோவ்க்ஸ் 33 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 7 ரன்னுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்ததுடன் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 88 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய பிரைடன் கார்ஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தங்களின் முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now