-mdl.jpg)
கடந்த ஆண்டு கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பர்மிங்காமில் நிலவிய மேகமூட்டமான நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸில் பந்துவீச்சில் இந்தியாவின் டாப் ஆர்டரே ஆட்டம் கண்டது.
சுப்மான் கில் 17 ரன்களிலும், புஜாரா 13 ரன்களிலும், விஹாரி 20 ரன்களிலும் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்களில் மேட்டியில் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் 15 ரன்களுக்குள் பெவிலியன் திரும்ப 98 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி தள்ளாடத் துவங்கியது.
சரிவில் இருந்து அணியை மீட்கும் பணியில் இறங்கியது ஜடேஜா- ரிஷப் பந்த் இணை. ஜடேஜா நிதான ஆட்டத்தை கையிலெடுக்க, ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தின் பக்கம் திரும்ப ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது. 51 பந்துகளில் அரை சதம் விளாசிய பண்ட், 89 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ஐந்தாவது சதம் இதுவாகும். அவர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.