
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் ரசிகர்கல் யாரும் அவ்வளவு எளிதில் இப்போட்டியை மறந்துவிட மாட்டார்கள்.
ஏனெனில் இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர்.பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இடையில் புஜாரா - ரஹானே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்தனர். பிறகு, 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி - பும்ரா ஜோடி பிரமாதமாக விளையாடியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது.