
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.
மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்க தவறினர். குறிப்பாக அவர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என இமாலய இலக்கை எட்டியதுடன் வரலாற்று வெற்றியையும் பதிவுசெய்திருந்தது. இதனால் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.