ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

India vs England Lord’s Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஜூலை 10) இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிநடைபெறவுள்ளது. இத்தொடாரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலும் வைத்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் விளையாடவுள்ளார். இதற்காக அவர் தனது பயிற்சிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள்
அதன்படி இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதுவரை அவர் இந்திய அணிக்காக 205 போட்டிகளில் 245 இன்னிங்ஸ்களில் விளையாடி 448 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 450 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது இந்திய பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பெறுவார்.
இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஜாகீர் கான், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதில் பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே தற்சமயம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள்
இதுதவிர்த்து இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 10 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் சாதனையையும் படைப்பார். முன்னதாக இஷாந்த் சர்மா 51 விக்கெட்டுகளையும், கபில் தேவ் 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 10 போட்டிகளில் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்
Win Big, Make Your Cricket Tales Now