குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது - ரியான் டென் டோஸ்கேட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறியுள்ளார்.

Kuldeep Yadav Comeback: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெறும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றி பெற்று காம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதையடுத்து இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்கள் தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா, குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்குமா, சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர் ஆகியோர் தங்கள் இடங்களை உறுதிசெய்வார்களா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கட்,"இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது. அந்த இருவரும் யார் என்பதை நேரம் தான் முடிவு செய்ய வேண்டும். வாஷிங்டன் சுந்தர் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார், குல்தீப் அற்புதமாக பந்து வீசுகிறார், ரவீந்திர ஜடேஜா எங்கள் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்.
அதனால் இவர்களில் யார் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. அதேசமயம் இப்போட்டியில் நிதீஷ் குமார் யாதவும் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அவர் ஆஸ்திரேலியாவில் சிறந்தவராக இருந்தார். கடந்த போட்டியில், நாங்கள் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை விரும்பினோம், ஆனால் இப்போது நிதிஷுக்கு பேட்டிங் ஆல்ரவுண்டராக அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைக்கலாம்" என்று தெரிவித்துள்ளர்.
Also Read: LIVE Cricket Score
குல்தீப் யாதவ் குறித்து பேசினால் அவர் இந்திய அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அதில் 56 விக்கெட்டுக்ளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now