
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேமி ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 54 ரன்களை எடுத்த கையோடு ஜேமி ஸ்மித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 24.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.