
ENG vs SA, 3rd ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐசிசி விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் 110 ரன்களையும், ஜோ ரூட் 100 ரன்களையும் விளாசினர். மேற்கொண்டு ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 62 ரன்களைச் சேர்க்க அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.