
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29 லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோரது சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களையும், கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்ணாண்டோ 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிய இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிஷன் மதுஷ்கா, திமுத் கருணரத்னே ஆகியோர் தலா 7 ரன்களுக்கும், பதும் நிஷங்கா 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சண்டிமாலும் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மிலன் ரத்நாயக்க 19 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 8 ரன்களிலும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.