
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அந்தவகையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எவில் லூயிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 16 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங்கும் அட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப்பும் முதல் பந்திலேயும், கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேசி கார்டி 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியானது 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 12 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.