
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சதமடித்து அசத்தியதுடன் 103 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 78 ரன்களையும், பிராண்டன் கிங் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து.
இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய ஜோ ரூட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 166 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.