
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ரும் முனைப்பிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜோ ரூட் 42 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த இங்கிலாந்த் வீரர் எனும் சாதனையை படைப்பார். ரூட் இதுவரை 178 ஒருநாள் போட்டிகளில் 6916 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இந்த சாதனை முன்னாள் வீரர் ஈயன் மோர்கனின் பெயரில் உள்ளது, அவர் 225 போட்டிகளில் 6957 ரன்கள் எடுத்துள்ளார்.