
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டு நிருபணமான நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும் ஐசிசி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன.