
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் பில் சால்ட்டின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் மூலம் பில் சால்ட் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
அதன்படி படி இந்தப் போட்டியில் சால்ட் 115 ரன்கள் எடுத்தால், டி-20 சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்துக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்தவர் என்ற அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடிப்பார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 31 டி20 போட்டிகளில் 29 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பில் சால்ட் 35.40 சராசரியில் 885 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் 115 ரன்களை எடுக்கும் பட்சத்தில் அந்த அணியின் முன்னாள் கெவின் பீட்டர்சன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ள வாய்ப்பு உள்ளது.