
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. இந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரமாக விளையாடியதுடன் சதமடித்தும் அசத்தினார். இந்த போட்டியில் அவர் 120 ரன்களை சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதேசமயம் அந்த அணியில் இளம் வீராங்கனை எம்மா லம்ப் 84 ரன்களைச் சேர்க்க, இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்களைக் குவித்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணியில் ஹர்லீன் தியோல் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த உமா சேத்ரி - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உமா சேத்ரி 45 ரன்களில் விக்கெட்டை இழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸூம் 8 பவுண்டரிகளுடன் 66 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.