
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளனர்.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதேசமயம் டி20 அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.