
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன் ஒருபகுதியாக இன்று நடைபெறும் வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி மட்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் செல்லாமல், தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. ஆனால் இத்தொடரில் பங்கேற்றுள்ள மற்ற அணிகள் அனைத்தும் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் நிலையில், இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலனை பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.