Advertisement

ஒருநாள் ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற வேண்டும் - இங்கிலாந்து பயிற்சியாளர்!

2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan November 16, 2022 • 12:41 PM
England Coach Matthew Mott Hopeful Of Ben Stokes Changing His Stance On ODI Retirement
England Coach Matthew Mott Hopeful Of Ben Stokes Changing His Stance On ODI Retirement (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் அற்புதமாக செயல்பட்ட இங்கிலாந்து அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 30 வருடங்கள் கழித்து பாகிஸ்தானை தோற்கடித்து பழி தீர்த்தது.

இருப்பினும் பாகிஸ்தான் நிர்ணயித்த 138 ரன்களை கட்டுப்படுத்த அந்த அணியின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி உயிரைக் கொடுத்து அற்புதமாக பந்து வீசி கேப்டன் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற முக்கிய வீரர்களை அவுட் செய்து வெற்றிகு போராடியது. ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் இறுதிப்போட்டியில் நிலவிய அழுத்தத்திற்கு அஞ்சாமல் 52 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 

Trending


அதை விட 2016 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை கொடுத்து தாரை வார்த்த கோப்பையை 6 வருடங்கள் கழித்து அதே இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வென்று கொடுத்த அவரது மன வைராக்கியம் அனைவரது பாராட்டுக்களை பெற்றது.

கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான போட்டிகளிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ் 2019 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயக்கன் விருது வென்று இங்கிலாந்து முதல் கோப்பையை முத்தமிட உதவினார். அத்துடன் அடுத்த சில மாதங்களில் ஹெண்டிங்லே நகரில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் தனி ஒருவனாக வெற்றியை பெற்று கொடுத்த அவர் தற்போது டி20 உலக கோப்பையையும் வென்று கொடுத்துள்ளதால் நவீன கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் மகத்தான வீரராக போற்றப்படுகிறார்.

இருப்பினும் பணிச்சுமையை நிர்வகித்து தனது கேரியரில் வெற்றிகரமாக செயல்பட நினைத்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 30 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஓய்வு பெற்றார். ஆனால் 2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பென் ஸ்டோக்ஸ் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமை பெற்றவர். அவரிடம் நாட்டுக்காக கொடுப்பதற்கு இன்னும் நிறைய உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது அவருடைய சொந்த முடிவாகும். ஆனால் அடுத்த வருடம் உலக கோப்பை நடைபெறுகிறது என்பதாலும் வரும் காலங்களில் நாங்கள் பெரிய அளவில் டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பதாலும் அவர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினால் எங்களுக்கு சிறப்பாக அமையும். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அசத்தும் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் விளையாடுவார் என்று நம்புவதாக கூறிய இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குனர் ராப் கீ, “எதுவுமே நிரந்தரமில்லை. என்ன நடக்கும் என்பதையும் யாரும் அறிய முடியாது. தற்சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அவரைப் போன்ற தரமான வீரர் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதே போல ஒருநாள் போட்டிகளிலும் மீண்டும் வந்து தம்மால் முடிந்த வரை அவர் மகிழ்ச்சியுடன் விளையாடுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

மேலும் “தயவு செய்து அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் நீங்கள் விளையாடுவீர்களா பென் ஸ்டோக்ஸ், நாட்டுக்காக உங்களை கேட்கிறேன்” என ஒட்டுமொத்த இங்கிலாந்தின் சார்பில் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டர் பக்கத்தில் நேரடியாகவே அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பென் ஸ்டோக்ஸ் செவி சாய்ப்பாரா என்பதே அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement