
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு மிகவும் மோசமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. நிச்சயமாக இது யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. உலகக்கோப்பையின் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வலிமையான இடத்தில் இருந்து, தொடர்ச்சியாக தவறான நேரத்தில் விக்கெட்டை கொடுத்து, பேட்டிங்கில் 300 ரன் அடிக்க முடியாமல் சுருண்டார்கள்.
பின்பு நியூசிலாந்து அணியின் விக்கெட்டை கைப்பற்றாமல் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றார்கள். இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்கள். இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளிடம் பேட்டிங்கில் இருநூறு ரன்கள் கூட எடுக்க முடியாமல் படுதோல்விகளை சந்தித்தார்கள்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் வீரர்களின் பெயர்களை எழுதிப் பார்த்தால், பேட்டிங் யூனிட்டில் மிக வலிமையான அணியாக தெரியக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் களத்தில் செயல்பாடு என்று வருகின்ற பொழுது அவர்கள் யாரும் தங்களுடைய தரத்திற்கு ஏற்ற வகையில் விளையாடவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் பெரிய பிரச்சனையாக அவர்களுடைய செயல் ஒருங்கிணைப்புதான் இருந்து வருகிறது.