
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார்.
இதனால் இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதில் அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட், இளம் அதிரடி வீரர் ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரில் ஒருவருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகசெயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.