
இன்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அந்த அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 20 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 14 பவுண்டரிகளுடன் 124 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 498 ரன்களைக் குவித்துள்ளது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தரப்பில் ஒல்லி போப் 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஒல்லி போப் 24 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 172 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து அசத்திய ஹாரி புரூக் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 565 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் கரண் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.