
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் இமாலய சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.