
இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இங்கிலாந்து அணி வீரர்கள் முல்தான் சென்றடைந்ததுடன், தங்களது பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.