
இங்கிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜான் டர்னர், டேன் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட்டிற்கு பணிச்சுமை காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் மற்றும் மேத்யூ பாட்ஸ் உள்ளிட்டோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.