
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டநாயகனாக மார்க் வுட்டும், தொடர் நாகன் விருதினை வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் இங்கிலாந்து கஸ் அட்கின்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், பேட்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மேற்கொண்டு பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் 4 இடங்கள் பின் தங்கியதுடன் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இப்பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8ஆம் இடத்திலும், விராட் கோலி 10 ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேபோல் ஷுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.