
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் சமீப காலமாக இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து வந்த மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவில் செயல்படாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜானி பேர்ஸ்டோவும் சமீப காலங்களில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். மேலும் நடந்துமுடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரிலும் இவர்களது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.