
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய எம்மா லம்ப் 18 ரன்களுக்கும், அர்மிடேஜ் 19 ரன்களுக்கும், பெய்ஜ் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஃபிரேயா கெம்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்ட் சதமடித்து அசத்தினார். அதேசமயம் பொறுப்புடன் விளையாடி வந்த ஃபிரேடா கெம்ப்பும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஃபிரேயா கெம்ப் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் பெஸ் ஹெத் ரன்கள் ஏதுமின்றியும், மேடி வில்லியர்ஸ் 14 ரன்களையும், கேப்டன் கேட் கிராஸ் 8 ரன்களிலும், இஸ்ஸி வாங் 15 ரன்களையும் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாமி பியூமண்ட் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து மகளிர் அணி தரப்பில் அர்லின் கெல்லி மற்றும் ஃப்ரீயா சார்ஜென்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.