
Joe Root Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஜாக் காலில் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 94 ரன்களையும், ஸாக் கிரௌலி 84 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.