
EN-W vs IN-W, 1st T20I: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற காணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஸ்மிருதி மந்தனா ஒருபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா ஸ்டிரைக்கை மாற்றினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோலும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.