
EN-W vs IN-W, 5th T20I: இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையிலும், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இதில் ஏற்கெனவே 4 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஒருபக்கம் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த ஷஃபாலி வர்மாவும் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 75 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரிச்சா கோஷ் 24 ரன்களையும், ராதா யாதவ் 14 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரராங்கனை சோபிக்க தவறினர். இதனால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே சேர்த்தது.