
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இதில் நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் வாய்ப்பையும் அதிகரிக்கும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இங்கிலாந்து அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.